Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

உயர்தர பாடத்தெரிவுகளில் சரியான தீர்மானங்களை மேற்கொள்ளுங்கள்

சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் உயர்தரத்தினைத் தொடர்வதற்காக ஏதேனும் ஒரு பாடத்துறையைத் தெரிவு செய்யும் நேரம்தான் அவர்களது எதிர்காலத்தினைத் தீர்மானிக்கும் நேரமாகிறது. இந்நேரத்தில், மாணவர்கள் வெறுமனே ஒரு பாடத்துறையைத் தெரிவு செய்வதாக அன்றி, தமது வாழ்க்கைப் பாதையைத் தெரிவு செய்கிறார்கள் என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும். சாதாரண தரம் போன்று இன்றி, உயர்தரமானது ஒரு குறித்தளவிலான மாணவர் தொகையை மாத்திரம் உள்ளீர்த்து அவர்களுக்குப் பல்கலைக்கழக உள்நுளைவினைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு போட்டிப் பரீட்சை ஆகும். எனவே ஒவ்வொரு மாணவனும் தமது குறிக்கோளுக்கும் இயலுமைக்கும் அமைய , எதிர்காலத்தில் எமக்கு தொழிசார் ரீதியில் பயன்தரக்கூடிய ஏதும் ஓர் துறையைத் தெரிவு செய்தல் அவசியமாகும்.

இந்த ரீதியில், மாணவர்கள் தெரிவு செய்யும் பாடத்துறைகள் மற்றும் பாடங்களில் பின்வரும் காரணங்கள் தாக்கம் செலுத்துகின்றன.

    1. மாணவர்களின் விருப்பம்
    2. இயல்தகைமை 
    3. ஆர்வம் 
    4. தொழில் வாய்ப்பு
    5. பாடங்களின் கவர்ச்சித்தன்மை 
    6. நண்பர்களின் தெரிவு 
    7. பெற்றார் விருப்பம்
    8. சமூகத்தின் எதிர்பார்ப்பு 
    9. பிறரது அழுத்தங்கள் 
    10. க.பொ.த.(சா.த) பரீட்சையில் பெற்ற பெறுபேறுகள் 
    11. கல்வித்தகைமை (சட்டரீதியான அனுமதி)


மேற்குறித்த காரணிகளில், மாணவர் விருப்பம், இயல்தகைமை, ஆர்வம், தொழில்வாய்ப்பு ஆகிய காரணிகளே கருத்திலெடுக்கப்பட வேண்டிய மிகமுக்கிய காரணங்கள் ஆகும். அதாவது, ஒரு பாடத்தினைத் தெரிவு செய்கையில் முதலில் மாணவருக்கு அப்பாடத்தில் சிறந்த சித்திகளைப் பெற வேண்டுமெனும் விருப்பமும், நம்பிக்கையும் காணப்பட வேண்டும். அப்பாடமானது எமது திறமைக்கும் ஆற்றலுக்கும் பொருத்தமான பாடம் எனும் மன நிறைவு காணப்பட வேண்டும். ஒருவேளை எமது திறமைகளுக்கு அப்பாற்பட்ட பாடமாக இருப்பினும்கூட விடாமுயற்சியுடன் அதீத ஆர்வமெடுத்து அப்பாடத்தினை மனதினுள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் எனும் எண்ணம் காணப்பட வேண்டும். உயர்தரத்தைப் பொருத்தமட்டில் இந்த நான்கு காரணமுமே ஒரு மாணவனை 3A சித்திக்களைப் பெற வழிவகுத்துவிடும்.

மேலும், நாம் தெரிவு செய்யும் பாடமானது ஏதோ ஒரு தொழில்வாய்ப்பைப் பெற்றுத்தரக்கூடிய பாடமாகக் காணப்படல் வேண்டும். எனவே நாம் கற்கும் பாடங்கள் மூலம் கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புக்கள் பற்றிய தெளிவினைப் பெற்ற பின்னர் அப்பாடத்தைத் தெரிவு செய்தல் சிறந்தது. அவ்வாறு தொழில் ஒன்றினைப் பெறுவதற்குப்
பொருத்தமற்ற பாடம் என்று தெரிந்த பாடங்களைத் தெரிவு செய்தல் பயனற்ற விடயமாகும். சில பாடங்கள் தொழில் வாய்ப்பு என்ற ரீதியில் பெரிதளவு பயனுடையதாக இல்லாவிடினும் Z புள்ளிகளை அள்ளித்தந்து பல்கலைக்கழக உள்நுளைவினை இலகுவாக்கும் பாடங்களாகக் காணப்படும். அவ்வாறான பாடங்களைக் கற்கும் போதும், பாடச் சேர்மானங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் அப்பாடச் சேர்மானகளுக்கு வழங்கப்படும் பட்டப்படிப்புகள், அவற்றினாலான வேலை வாய்ப்புக்கள் என்பவற்றைப் பற்றி கட்டாயமாக ஆய்வு மேற்கொண்டதன்  பின்னர் தெரிவுகளை நிச்சயிக்க வேண்டும்.


மேலும், நண்பர்களின் தெரிவுகள் எமது தெரிவுகளில் தாக்கம் செலுத்துவதானது ஒரு விதத்தில் நட்புசார்ந்த விடயமாகக் கருதப்படினும், நமது எதிர்காலத்தை பாதிக்கும் காரணியாக அமைந்து விடுகிறது. ஒரு பாடத்தில் நண்பர் ஒருவருக்கு ஆர்வமும், விருப்பமும் , இயலுமையும் இருக்குமாயின் அவர் அப்பாடத் துறையினைத் தெரிவு செய்திருப்பார். அவரைப் பொருத்தமட்டில் அது சிறப்பாக சித்தியடையக் கூடிய பாடமாகக் காணப்படும். ஆனால் வெறுமனே ஒரு “Partnership” இற்காக அப்பாடத்தை இன்னொரு மாணவன் தெரிவு செய்யும் போது அம்மாணவருக்கு அது சிறப்பான தெரிவாக அமைவது குறைவு.


சில துறைகளைப் பொருத்தமட்டில், கவர்ச்சிகரமான துறை என்பதன் காரணமாக மாணவர்கள் அதிகளவில் தெரிவு செய்யும் துறையாகக் காணப்படுகின்றன. அதே போன்று சில பாடங்களை தெரிவு செய்கையிலும் பாடத்தின் கவர்ச்சியானது தாக்கம் செல்லுத்தச் செய்கிறது. இவ்வாறாக கவர்ச்சித்தன்மைக்காக கற்றல் என்பது முழு மனதுடனும் அத்துறையில் எதையேனும் சாதிக்க வேண்டும் என்ற மனப்பாங்குடனும் கற்பதற்கு வழிவகுக்கும் பட்சத்தில் அது பயன்தரக்கூடியதாக இருப்பினும் , பல மாணவர்களுக்கு 'கற்றல்' எனும் பெயருக்காக கற்கும் திருப்தியை மட்டும் தந்துவிடுகின்றது. இவற்றால் கிடைக்கும் பயன்களை விட, எமக்கு பொருத்தப்பாடுடைய, விருப்பமான ஏதோ ஒரு பாடத்தை/துறையினை தெரிவு செய்தல் சிறந்ததாகும். வெறுமனே பாடங்களின் கவர்ச்சித்தன்மைக்காகவோ பிறரது அழுத்தங்கள் காரணமாகவோ விருப்பமின்றி மேற்கொள்ளும் பாடத் தெரிவுகள் எந்த விதத்திலும் எம்மை முன்னேற்றப்போவதில்லை. 

அடுத்தது, சில மாணவர்களுக்கு க.பொ.த. சாதாரண தரத்தில் பெற்ற பெறுபேறுகள் உயர்தர பாடத்தெரிவுகளில் தாக்கம் செலுத்துகின்றன. இது சில சந்தர்ப்பங்களில் சரியான தீர்மானமாக அமைந்தாலும் இன்னும் சில சந்தர்ப்பங்களில் எமது திறமையை மட்டுப்படுத்துவதாக அமைந்து விடுகிறது. ஒரு பாடத்தில் சாதாரண தர பெறுபேறுகள் குறைவாகக் காணப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த பாடத்தை உயர்தரத்தில் தெரிவு செய்து அப்பாடத்தில் முன்னேற வேண்டும் என நாம் எண்ணுவோமானால், அப்பாடத்திற்காக அதீத சிரத்தை எடுத்து ஆர்வத்துடன் கற்று, சந்தேகங்களுக்கான விளக்கங்களை சரியான முறையில் பெற்று, நம்பிக்கையுடன் கற்கும்போது பலகலைக்கழக உள்நுளைவினைக்கூட பெற்றுவிட முடியும். ஆனால் குறைந்த பெறுபேறு காரணமாக எம்மால் முடியாது எனும் எண்ணம் வந்து விட்டாலோ அல்லது அப்பாடம் தொடர்பில் வெறுப்புற்று  விட்டாலோ அதனைத் தெரிவு செய்தலை தவிர்த்தல் சிறந்ததாகும். ஆனால் சாதாரண தரத்தில் கீழ்மட்ட பெறுபேறுகளைப் பெற்றவர்கள் கூட 2வருட சீரான கற்றல் மூலம் மருத்துவ,பொறியியல் துறைகளில் சாதித்திருப்பதை மனதிற்கொள்ள வேண்டும். 

மேலும், சட்டரீதியாக குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகைமைகள் காணப்படும் பட்சத்திலேயே உயர்தர தெரிவுகளை அதற்கேற்ப தெரிவுசெய்ய முடியும். அவற்றிலும் சில நடைமுறைகள் , சலுகைகள் என்பவை காணப்படுகின்றன. பொதுவாக, இவை தொடர்பான விளக்கம் மாணவர்களிடம் குறைவு என்பதால் வாய்ப்புக்களை தவறவிடும் சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே இதுதொடர்பிலும் சரியான விளக்கங்களைப் பெற்று, உயர்தரத்தில் சிறந்த தெரிவுகள் மூலம் உயர்நிலை அடைவதும் அது தொடர்பில் மாணவர்களுக்கு வழிகாட்டல்களை ஊட்டுதலும் மாணவர், ஆசிரியர் மற்றும் கற்றோர் சமூகத்தின் பொறுப்பாகும்.