அனுமதி பெறுவதற்கான பொதுத் தகைமைகள்
- க.பொ.த சாதாரண தரத்தில் போதனாமொழி (தாய்மொழி)யும் கணிதமும் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். அவற்றில் ஏதேனும் 3 பாடங்களிலாவது திறமைச் சித்தி (C) அல்லது அதனை விட உயர் சித்திகளைப் பெற்றிருக்க வேண்டும்.
- இல்லையேல், போதனாமொழி (தாய்மொழி)யும் கணிதமும் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் அவற்றில் ஏதேனும் 2 பாடங்களில் மாத்திரம் திறமைச் சித்தி (C) காணப்படின், போதனாமொழி மற்றும் கணிதம் தவிர்ந்த, சாதாரண சித்தி(S) பெற்ற ஏதேனும் ஒரு பாடத்தில் பாடசாலைமட்ட கணிப்பீடுகளில் திறமை அல்லது அதற்கு மேற்பட்ட தேர்ச்சிகளைப் பெற்றிருப்பின், அதனை சாதாரண சித்தியாகக் கருதி உயர்தர அனுமதியினைப் பெற முடியும்.
- மேற்குறிப்பிட்ட தகைமைகளைப் பெறாவிடினும், க.பொ.த சாதாரண தரத்தில் குறைந்தபட்சம் 3 திறமைச் சித்தி (C) களுடன் போதனாமொழி அல்லது கணிதம் உட்பட 5 பாடங்களில் சித்தி பெற்றிருப்பின், அடுத்த ஆண்டிற்குள் (1) இல் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிபந்தனையின் அடிப்படையில் தற்காலிகமாக உயர்தர அனுமதியினைப் பெற முடியும். ஆனால், நிபந்தனையின் அடிப்படையில் அடுத்த ஆண்டிற்குள் உரிய பெறுபேறுகளைப் பெற்றுத்தராவிடின் பாடசாலையில் இருந்து விலக்கப்பட வேண்டும்.
- அவ்வாறாக நிபந்தனையின் அடிப்படையில் பெறுபேறுகளைப் பெற்றிருப்பின், பாடசாலையில் தரத்தினை தொடர முடியும் என்பதுடன், இரண்டாம் அமர்வின் பெறுபேற்றிலும் இல(2) இல் குறிப்பிடப்பட்டவாறாக திறமைச்சித்தித் தேவையினைப் பூர்த்தி செய்துகொள்ளவும் முடியும்.
பாடத்துறைகள் மற்றும் பாடச்சேர்மானகள்
உயர்தரத்திற்கு அனுமதிக்கப்படும் மாணவர்கள் , குறித்த 5 துறைகளுள் ஒன்றினைத் தெரிவு செய்து அதற்கான பாடச்சேர்மானங்களையும் அறிவுறுத்தல்களையும் கருத்திற்கொள்ள வேண்டும். அத்துடன் ஒவ்வொரு துறைகளையும் தெரிவு செய்வதற்கான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதனையும் கருத்திற்கொள்ளல் வேண்டும்.
பாடத்துறைகள் (Streams)
- கலைத்துறை (Arts)
- வர்த்தகத்துறை (Commerce)
- உயிரியற்துறை (Biology)
- பொறியியற்துறை (Engineering/Maths)
- தொழிநுட்பத்துறை (Technology)
அவ்வாறாக தெரிவு செய்த பாடத்துறையில் பாடச்சேர்மானங்களுக்கு ஏற்ப 3 பிரதான பாடங்களையும், பொதுத் தகவல் தொடர்பாடல் (GIT), பொது ஆங்கிலம் (General English) மற்றும் பொதுச் சாதாரண பரீட்சை (CGT) ஆகிய பாடங்களையும் கற்றல் வேண்டும். இவற்றில், பொது ஆங்கிலம் மற்றும் பொதுத் தகவல் தொடர்பாடல் ஆகிய பாடங்கள் பல்கலைக்கழக உள்நுளைவிற்கு பங்களிப்பு செய்வதில்லை. ஆனாலும் உயர்தர பெறுபேற்றுச் சான்றிதழில் அவற்றிற்கான பெறுபேறுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். பொதுச் சாதாரண பரீட்சை(CGT)இனைப் பொறுத்தவரையில், ஏனைய அனைத்து பாடங்களிலும் A தர சித்தியையே பெற்றிருப்பினும்கூட CGT பாடத்தில் சித்தி பெறாத பட்சத்தில் பல்கலைக்கழக உள்நுளைவினைப் பெற முடியாது. அடுத்ததாக பாடச்சேர்மானங்கள் பற்றிய தெளிவு மாணவர்களிடையே காணப்படல் வேண்டும்.
- கலைப் பிரிவு (Arts)
- வர்த்தகப் பிரிவு (Commerce)
- உயிரியல் விஞ்ஞான / பௌதிக விஞ்ஞானப் பிரிவு (Science/Maths)
- தொழிநுட்பப் பிரிவு (Technology)
இவை தவிர்ந்து ஏனைய பாடச்சேர்மானங்களைத் தெரிவு செய்வதாயின் அவ்வாறான மாணவர்கள் “பொதுப்பாடத் துறை” எனும் விசேட பாடத்துறையின் கீழ் பயில்வதாகக் கருதப்படும். அவ்வாறாக வித்தியாசமான பாடச் சேர்மானங்களைத் தெரிவு செய்யும்போது அச்சேர்மானங்களுக்கான பட்டப்படிப்புகள் , கற்கை நெறிகள் என்பன பல்கலைக்கழகங்களில் கிடைக்கப்பெறுகின்றனவா என்பதனையும் அவைசார்ந்த தொழில்வாய்ப்புக்களையும் ஆராய்ந்து தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும்.